லாக்டவுனில் இருப்பது போன்று உள்ளது - மிக்கி ஆர்த்தர்!
நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறும் தருவாயில் இருக்கிறது. குறிப்பாக நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக வென்று நல்ல தொடக்கத்தை பெற்ற அந்த அணி இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் தொடர்ந்து 8ஆவது முறையாக உலகக் கோப்பையில் தோற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் மண்ணை கவ்வியது.
அதை விட கத்துக்குட்டியாக கருதப்படும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்த அந்த அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் உலகக்கோப்பையில் முதல் முறையாக 4 தொடர்ச்சியான தோல்விகளை பதிவு செய்து மோசமான சாதனை படைத்த பாகிஸ்தான் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வென்றது.
அதன் காரணமாக எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாலும் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதி செல்வதற்கு வாய்ப்புள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் பாதுகாப்பு என்ற பெயரில் லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் எவ்வளவு நெருக்கடி இருந்ததோ அதே போன்ற நெருக்கடியை பாகிஸ்தான் வீரர்கள் சந்தித்துள்ளது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அதிகப்படியான பாதுகாப்புக்கு கீழ் நாங்கள் இருப்பதை நான் மிகவும் கடினமாக உணர்கிறேன். குறிப்பாக நீங்கள் ஒரு தளத்திலும் உங்களுடைய அணியினர் மற்றொரு தளத்திலும் இருப்பதால் லாக்டவுன் சமயத்தில் இருந்தது போன்ற உணர்வு தெரிகிறது. காலை உணவும் தனி அறையில் வழங்கப்படுகிறது. சாதாரணமாக எங்களுடைய வீரர்கள் சாலையில் இருந்து விரும்பிய இடங்களில் வெளியே சென்று உணவு சாப்பிடுவார்கள். தற்போது உங்களால் அதை செய்ய முடியவில்லை என்பது கடினமாகவும் திணறலாகவும் இருக்கிறது.
மேலும் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் புதிய மைதானத்தில் நடைபெறுகிறது. எங்களுடைய வீரர்கள் உண்மையாக இந்த மைதானங்களை ரசித்திருக்கிறார்கள். அதிலும் கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற ஐபிஎல் தொடரை டிவியில் பார்த்த போது தெரிந்து கொண்ட மைதானங்களில் அவர்கள் தற்போது விளையாடுவதை உற்சாகமாக கருதுகின்றனர். ஆனாலும் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் கால சூழ்நிலைகளை தெரிந்து கொள்ளாமல் முதல் முறையாக இந்த மைதானங்களில் விளையாடுவது எங்களுடைய வீரர்களுக்கு பின்னடைவாக இருக்கிறது” என்று கூறினார்.