எல்எல்சி2022: மீண்டும் மிரட்டிய மிர், மசகட்ஸா; இந்தியா கேப்பிட்டல்ஸ் வெற்றி!
லெஜண்ட்ஸ் லீக் 2022 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 7ஆவது லீக் போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் ஓபனர்கள் கெவின் ஓ பிரையன் 23, கேப்டன் தில்சன் 75 ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அடுத்து சிம்மன்ஸ் 0, திசாரா பெரேரா 5 போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.
இறுதியில் பௌலர்கள் ஜோகிந்தர் ஷர்மா 11, ஸ்வான் 26 ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர் கேப்டன் கௌதம் கம்பீர் 14 சொதப்பிய நிலையில் அடுத்து ஜிம்பாப்வே வீரர்கள் மிர் 41, மசகட்சா 50 ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்கள்.
அடுத்து களமிறங்கிய தினேஷ் ரம்டீன் 13 அடித்து ஆட்டமிழந்தப் பிறகு பாட்டியா, நர்ஸ் ஆகியோர் தலா 13 பந்துகளில் 11 ரன்கள் அடித்ததால் இந்திய கேப்பிட்டல்ஸ் அணி 18.5 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டியது. இதன்மூலம் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.