எல்எல்சி 2023: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மணிப்பால் டைகர்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Mon, Nov 20 2023 22:58 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய மணிப்பால் அணிக்கு ராபின் உத்தப்பா - வால்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வால்டன் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹாமில்டன் மஸகட்ஸா 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 37 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 2 சிக்சர்கலுடன் 23 ரன்களிலும் என ராஜத் பாட்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து களமிறங்கிய காலின் டி கிராண்ட்ஹோம், கோட்ஸர், அமிதோஸ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய திசாரா பெரேரா 1 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 32 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மணிப்பால் டைகர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் ராஜத் பாட்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு கிறிஸ் கெயில் - ஜாக் காலிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாக் காலிஸ் அரைசதம் கடந்தார். பின் 38 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் கெயில் ஆட்டமிழக்க, 56 ரன்களுக்கு ஜாக் காலிஸும் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் வந்த ரிச்சர்ட் லீவி, கெவின் ஓ பிரையன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் போராடிய பார்த்தீவ் படேல் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து வந்த வீரர்களாலும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே எடுத்தது. 

மணிப்பால் டைகர்ஸ் அணி தரப்பில் பர்விந்தர் அவானா 4 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங், திசாரா பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் மணிப்பால் டைகர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை