எல்எல்சி 2023: மனிப்பால் டைகர்ஸை வீழ்த்தி சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் வெற்றி!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் மனிப்பால் டைகர்ஸ் - சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மனிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மனிப்பால் அணியில் பத்ரிநாத் 2 ரன்களுக்கும், ராபின் உத்தப்பா 11 ரன்களுக்கும், முகமது கைஃப் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த மஸகட்ஸா - ஏஞ்சலோ பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் மஸகட்ஸா 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் ஏஞ்சலோ பெரேரா 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மனிப்பால் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்தது. சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி தரப்பில் அப்துல் ரஸாக், ஜஹன் போத்தா, பவான் நெஹி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு ஜெஸ்ஸி ரைடர் - உபுல் தரங்கா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் தலா 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ராஸ் டெய்லர் 7, சதுரங்கா டி சில்வா 2, ராஜெஷ் பிஷ்னோய் 11 ரன்கள் என விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரீவஸ்தா கோஸ்வாமி 19 ரன்களையும், பவான் நெஹி 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் மனிப்பால் டைகர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.