எல்எல்சி 2023: சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸை வீழ்த்தி அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அசத்தல் வெற்றி!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டுவைன் ஸ்மித் - மார்ட்டின் கப்தில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஸ்மித் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குர்க்ரீத் சிங் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ட்டின் கப்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனையடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 10, டிராகோ 17, ஸ்டூவர்ட் பின்னி 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி வந்த நாகரும் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் 19.2 ஓவர்கள் முடிவில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சூப்பர்ஸ்டார்ஸ் அணி தரப்பில் ஹமித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜெஸ்ஸி ரைடர், உபுல் தரங்கா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த தில்ஷன் முனவீரா 34 ரன்களையும், ஸ்ரீவஸ்டா கோஸ்வாமி 18 ரன்களையும், ராஸ் டெய்லர் 12 ரன்களிலும், மன்விந்த பிஸ்லா 18 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் சூப்பர்ஸ்டார்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹைதராபாத் அணி தரப்பில் பவன் சுயல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.