எல்எல்சி 2023: கிறிஸ் கெயில் அதிரடியில் உலக ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்றே ஓய்வை அறித்த சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய மகாராஜாஸ், உலக ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள உலக ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ராபின் உத்தப்பா 5 ரன்களிலும், சோதி 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பிஸ்லா - சுரேஷ் ரெய்னா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிஸ்லா 36 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 49 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இர்ஃபான் பதான் மட்டும் 25 ரன்களைச் சேர்த்திருந்ததார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை மட்டுமே எடுத்தது. உலக ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் பிரெட் லீ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய உலக ஜெயண்ட்ஸ் அணியில் ஹாசிம் அம்லா 6 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெயில் - ஷேன் வாட்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் கிறிஸ் கெயில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதன்பின் 26 ரன்களில் ஷேன் வாட்சனும், 57 ரன்களிலும் கிறிஸ் கெயில் 57 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க, அதன்பின் வந்த ஆரோன் ஃபிஞ்ச் 5 ரன்களிலும், ராஸ் டெய்லர் 7 ரன்களிலும், ஸ்மித் படேல் 12 ரன்களிலும், பாவெல் 3 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் அந்த அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா மகாராஜாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதிசெய்தது.