இந்த போட்டியில் நான் மட்டுமின்றி அனைவருமே சிறப்பாக பந்துவீசினோம் - லோக்கி ஃபெர்குசன்!

Updated: Sat, Oct 14 2023 12:28 IST
இந்த போட்டியில் நான் மட்டுமின்றி அனைவருமே சிறப்பாக பந்துவீசினோம் - லோக்கி ஃபெர்குசன்! (Image Source: Google)

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் தற்போது நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கும் சென்றுள்ளது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பாக முஷ்பிக்கூர் ரஹீம் 66 ரன்களையும், ஷாகிப் அல் ஹசன் 40 ரன்களையும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் 10 ஓவர்கள் வீசி 49 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பின்னர் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய அவர், “இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் நான் மட்டுமின்றி அனைவருமே சிறப்பாக பந்துவீசினோம். போட்டியின் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்ததால் போட்டியின் முழுவதுமே அவர்களுக்கு எதிராக அழுத்தத்தை கொடுத்து வெற்றி பெற முடிந்தது.

அதிலும் குறிப்பாக என்னுடைய இந்த செயல்பாடு எனக்கு திருப்தி அளிக்கிறது. ஹைதராபாத் மைதானத்தை விட சென்னை மைதானத்தில் அதிகமாக பவுன்ஸ் இருந்தது. எனவே நான் துவக்கத்திலேயே என்னுடைய சில திட்டங்களை வெளிப்படுத்தி அதில் வெற்றியும் கண்டேன். இந்த தொடரின் ஆரம்ப கட்டத்திலேயே நாங்கள் 3 வெற்றிகளை பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு அணியாக நாங்கள் மிகவும் ரசித்து கிரிக்கெட் விளையாடி வருகிறோம்.

அடுத்த போட்டியிலும் நிச்சயம் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏற்கனவே நான் இந்தியா முழுவதுமே சென்று விளையாடி உள்ளதால் அந்த அனுபவம் எனக்கு கை கொடுக்கிறது. ஆனால் சென்னையில் மட்டும் நான் நிறைய போட்டிகளில் விளையாடியது கிடையாது. தற்போது இந்த மைதானத்திலும் எனது இந்த பந்துவீச்சு எனக்கு திருப்தி அளிக்கிறது. நிச்சயம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த போட்டியிலும் இதேபோன்று சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவேன்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை