MLC 2024: உன்முக்த் சந்த், அலி கான் அபாராம்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் இரண்டாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் ஜேசன் ராய் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய உன்முக்த் சந்த் ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கி ஷாகிப் அல் ஹசன் 18 ரன்களுக்கும், நிதீஷ் குமார் 26 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 4 ரன்களுக்கும், ஆண்ட்ரே ரஸல் 10 ரன்களுக்கும், என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உன்முக்த் சந்த் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 68 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஸியா உல் ஹக், முகமது மொஹ்சின், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவான் கான்வே ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் கேப்டன் டூ பிளெசிஸ் 14 ரன்களிலும், ஆரோன் ஹார்டி 11 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த டெவான் கான்வேவும் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஜோஷுவா 18 ரன்களுக்கும், அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 02 ரன்களுக்கும், மிலிந்த் குமார் ரன்கள் ஏதுமின்றியும், ஜெரால்ட் கோட்ஸி, முகமது மொஹ்சின் ஆகியோர் தலா 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் சூப்பர் கிங்ஸ் அணியானது 120 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் இருதிவரை போராடிய கால்வின் சாவேஜ் 29 ரன்களைச் சேர்த்தார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஆனாலும் சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அலி கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சீசனையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.