பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!

Updated: Wed, May 01 2024 11:17 IST
பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, மும்பை அணி முதல் 6 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் நேஹால் வதேரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷான் 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நேஹால் வதேரா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 46 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடியதுடன் 35 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங் கொடுத்ததன் மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அர்ஷின் குல்கர்னி ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் கேஎல் ராகுல் 28 ரன்களிலும், தீபக் ஹூடா 18 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டொய்னிஸ் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் வெற்றியையும் எளிதாக்கினர். அத்ன்பின் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோய்னிஸும் தனது விக்கெட்டை இழந்தார். 

இதனால் இப்போட்டி இன்னிங்ஸின் கடைசி ஓவர் வரை சென்றது. ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிகோலஸ் பூரன் 14 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெர்றிபெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “டி20 கிரிக்கெட்டில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம் என நினைக்கிறேன். இன்றைய தினமும் நாங்கள் அப்படி தான் தோல்வியைச் சந்தித்தோம். இன்றைய போட்டியில் நான்கள் விளையாட வேண்டிய பந்துகளில் தவறான ஷாட்டுகளை தேர்வு செய்து அடித்ததன் காரணமாகவே விக்கெட்டுகளை இழந்தோம்.

இந்த தோல்விகளிலிருந்து மீள முடியும் என எப்போதும் நான் நம்பினேன். அதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்து வருகிறேன். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இன்றைய போட்டியில் எங்கள் அணியில் நேஹால் வதேரா அபாரமாக செயல்பட்டார். கடந்த ஆண்டும் அவர் இதனை செய்ததை பார்த்துள்ளேன். கூடிய விரைவில் அவர் இந்திய அணிக்காகவும் விளையாடுவார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை