எல்பிஎல் 2021: ராஜபக்ஷ அதிரடி; கலே கிளேடியேட்டர்ஸ் வெற்றி!
இலங்கையின் உள்ளூர் டி20 லீக் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நேற்று தொடங்கியது. சீசனின் முதல் போட்டியில் கலே கிளேடியேட்டர்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் முதலில் பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய கலே கிளாடியேட்டர்ஸ் அணி பனுகா ராஜபக்ஷ, சமித் படேல் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ராஜபக்ஷ 56 ரன்களையும், சமித் படேல் 42 ரன்களையும் சேர்த்தனர். ஜாஃப்னா அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கைத் துரத்திய ஜாஃப்னா கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 110 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதன்மூலம் கலே கிளாடியேட்டர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.