எல்பிஎல் 2023: கண்டியை வீழ்த்தி கொழும்பு த்ரில் வெற்றி!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - பி லௌவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கொழும்பு அணியில் பாபர் ஆசம் 9 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய லஹிரு உதாரா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் இணைந்த பதும் நிஷங்கா - நிபுன் தனஞ்செயா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களுக்கும், மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிபுன் தனஞ்ச்செயா 40 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய இஃப்திகா அஹ்மதும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த வீரர்களும் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது. கண்டி அணி தரப்பில் ஏஞ்சலோ மேத்யூஸ், இசுரு உதானா, வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கண்டி அணிக்கு முகமது ஹாரிஸ் - ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹாரிஸ் 1 ரன்னிலும், ஸமான் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சஹானும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னார் களமிறங்கிய வநிந்து ஹசரங்கா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 11, டி சில்வா 16 ரன்கள் என ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வநிந்து ஹசரங்காவும் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆசிஃப் அலி 33 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதனால் கடைசி ஓவரில் கண்டி அணி வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டது. ஆனால் கண்டி அணியால் இலக்கை எட்டமுடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் பி லௌவ் கண்டி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.