எல்பிஎல் 2023: ஷோயிப் மாலிக் போராட்டம் வீண்; ஜாஃப்னாவை வீழ்த்தியது தம்புலா!

Updated: Mon, Aug 07 2023 23:20 IST
எல்பிஎல் 2023: ஷோயிப் மாலிக் போராட்டம் வீண்; ஜாஃப்னாவை வீழ்த்தியது தம்புலா! (Image Source: Google)

இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11அவது லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய தம்புலா ஆரா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கேப்டன் குசால் மெண்டிஸ் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த சமரவிக்ரமா - குசால் பெரேரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளிப்படுத்தினர். 

இருவரும் இணைந்து பொறுப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சமரவிக்ரமா 30 ரன்களுக்கும், குசால் பெரேரா 41 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தனஞ்செயா டி சில்வா, அலெஸ்க் ரோஸ், ஜனித் லியாங்கே, ஹசன் அலி என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

இறுதியில் ஹைடன் கெர் ஓரளவு தாக்குப்பிடித்து 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 25 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தம்புலா ஆரா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களைச் சேர்த்துள்ளது. ஜாஃப்னா அணி தரப்பில் ஷோயிப் மாலிக், நுவான் துஷாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணியும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ரஹ்மனுல்லா குபாஸ், சரித் அசலங்கா, தாஹித் ஹிர்டோய், டேவிட் மில்லர் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் களமிறங்கிய சோயிப் மாலிக் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் துனித் வல்லலகே, கேப்டன் திசாரா பெரேரா, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இருப்பினும் கடைசி வரை போராடிய ஷோயிப் மாலிக் அரைசதம் கடந்ததுடன், 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 74 ரன்களைச் சேர்த்த நிலையிலும், ஜாஃப்னா அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது. தம்புலா ஆரா அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் தம்புலா ஆரா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இந்த வெற்றியின் மூலம் தம்புலா ஆரா அணி நடப்பாண்டு எல்பிஎல் தொடரின் புள்ளிப்பட்டியளில் முதலிடத்தைத் தக்கவைத்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை