எல்பிஎல் 2023: பதிரானா அசத்தல்; கண்டியை வீழ்த்தியது கொழும்பு!

Updated: Mon, Jul 31 2023 23:32 IST
எல்பிஎல் 2023: பதிரானா அசத்தல்; கண்டியை வீழ்த்தியது கொழும்பு! (Image Source: Google)

இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் கலைகட்ட தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - பிலௌவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பதும் நிஷங்காவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த பாபர் ஆசாம் - ஃபெர்னாண்டோ இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசம் அரைசதம் கடந்தார். 

இதற்கிடையில் ஃபெர்னாண்டோ 28 ரன்களிலும், பாபர் ஆசாம் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 59 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. கண்டி அணி தரப்பில் இசுரு உதானா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கண்டி அணியில் தொடக்க வீரர்கள் தனுகா தபரெ 4 ரன்களிலும், தினேஷ் சண்டிமல் 10 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் 15 ரன்களுக்கும், ஏஞ்சலோ மேத்யூஸ் 25 ரன்களுக்கும், அஷென் பண்டாரா 12 ரன்களுக்கு என சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் வநிந்து ஹசரங்காவும் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்ஃப்ராஸ் அஹ்மதும் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றம்ளித்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பி லௌவ் கண்டி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் மதீஷா பதிரானா 3 விக்கெட்டுகளையும், நசீம் ஷா, ஜெஃப்ரி வண்டர்சே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் பி லௌவ் கண்டி அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை