எல்பிஎல் 2023: செய்ஃபெர்ட் காட்டடி; 181 ரன்களை இலக்காக நிர்ணயித்து கலே!
நான்காவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் கலே டைட்டன்ஸ் - பி லௌவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ர கலே டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஷெவோன் டேனியல் - லசித் க்ரூஸ்புலே இணை களமிறங்கியது. இதில் லசித் 11 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்ஷா 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஷெவோன் டேனியலும் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த் டிம் செய்ஃபெர்ட் - ஷாகிப் அல் ஹசன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய டிம் செய்ஃபெர்ட் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் 30 ரன்களை எடுத்திருந்த ஷாகிப் அல் ஹசன் எதிர்பாரதவிதமாக ரன் அவுட்டாகினார்.
அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிம் செய்ஃபெர்ட் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 74 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து கடின இலக்கை நோக்கி கண்டி அணி விளையாடவுள்ளது.