லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் தம்புளா சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொழும்பு அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் ஏஞ்சலோ பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் ஏஞ்சலோ பெரேரா 41 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 36 ரன்கள் எடுத்திருந்த ரஹ்மனுல்லா குர்பாஸும் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய சமரவிக்ரமா, ஷதாப் கான், கேப்டன் திசாரா பெரேரா 7 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கருணரத்னே இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களைச் சேர்த்தது. தன்புளா சிக்ஸர்ஸ் அணி தரப்பில் நுவான் பிரதீப், முகமது நபி ஆகியொர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தம்புளா சிக்ஸர் அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - குசால் பெரேரா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை தொடக்கம் முதலே உயர்த்தினர். இருவரும் இணைந்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் தங்களது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 54 ரன்களை எடுத்திருந்த ரீஸா ஹென்றிக்ஸ் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் அடுத்த சில பந்துகளிலேயே 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 80 ரன்களை எடுத்திருந்த குசால் பெரேராவும் தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய லஹிரு குமாரா 11 ரன்களையும், மார்க் சாப்மேன் 23 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தம்புளா சிக்ஸர்ஸ் அணியானது 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் பெரேரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.