இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்ற இத்தொடரில் கலே மார்வெல்ஸ், ஜாஃப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்திருந்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - முஹ்மது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முஹ்மத் வசீம் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் பிலீப்ஸ் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலும், பின்னர் களமிறங்கிய நிபுன் தனஞ்செயா 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன் காரணமாக கொழும்பு அணி 42 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் குர்பாஸுடன் இணைந்த சமரவிக்ரமாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் 30 ரன்கள் சேர்த்த நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சதாப் கானும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரவிக்ரமா அரைசதம் கடந்ததுடன் 62 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து துனித் வெல்லலாகே 28 ரன்களுக்கும், திசாரா பெரேரா மற்றும் விஜேசுந்தர் ஆகியோரும் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே சேர்த்தது. கண்டி ஃபால்கன்ஸ் அணி தரப்பில் ஹஸ்னைன் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் தினேஷ் சண்டிமால் 6 ரன்களிலும், முகமது ஹாரிஸ் 10 ரன்களிலும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 20 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 10 ரன்களுக்கும், கேப்டன் வநிந்து ஹசரங்கா ஒரு ரன்னிலும், சதுரங்கா டி சில்வா 9 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து மெண்டிஸுடன் இணைந்த தசுன் ஷனகாவும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடந்த நிலையில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 54 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து தசுன் ஷனகாவும் 39 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் கண்டி ஃபால்கன்ஸ் அணி நடப்பு சீசன் எல்பிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதன்படி இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது. அதேசம்யம் இப்போட்டியின் தோல்வியின் மூலம் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பினை இழந்துள்ளது.