LPL 2024: ஷதாப், குர்பாஸ் அபாரம்; ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!

Updated: Sun, Jul 14 2024 23:06 IST
Image Source: Google

இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஜாஃபனா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் பதும் நிஷங்கா 3 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் ரன்கள் ஏதுமின்றியும், மெற்றொரு தொடக்க வீரரான குசால் மெண்டிஸ் 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா 13 ரன்களுக்கும், தனஞ்செயா டி சில்வா 6 ரன்களுக்கும்,ஃபேபியன் ஆலன் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் களமிறங்கிய விஜயகாந்த் வியாஸ்காந்த் ஓரளவு தாக்குப்பிடித்து 25 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் களமிறங்கிய பிரமோத் மதுஷன் 10, எஷான் மலிங்கா 15 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக ஜாஃப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது. கொழும்பு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷதாப் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் ஏஞ்சலோ பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 25 ரன்களைச் சேர்த்த நிலையில் ஏஞ்சலோ பெரேரா 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய முஹ்மது வசீம் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், முஹ்மது வசீம் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிபெற செய்தனர். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதன்மூலம் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 9.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி நடப்பு லங்கா பிரீமியர் லீக் தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷதாப் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை