எல்பிஎல் 2022: சண்டிமல், போபாரா அதிரடி; கொழும்பு ஸ்டார்ஸ் த்ரில் வெற்றி!
நடப்பாண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் - கலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பந்துவீச தீர்மானித்து கலே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய கலே அணிக்கு தனுகா தபாரெ - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் அரைசதமடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட தனுகா 33 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த குசால் மெண்டிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
இதற்கிடையில் மூன்றாவதாக களமிறங்கிய லஹிரு உதாரா 24 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 74 ரன்கள் எடுத்திருந்த குசால் மெண்டீஸும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஷஃபிக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், 58 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கலே கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களைச் சேர்த்தது. கொழும்பு அணி தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு அணியின் தொடக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா 2 ரன்களோடு விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமல் - சரித் அசலங்கா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சண்டிமல் அரைசதம் கடந்தார். அதன்பின் 63 ரன்களில் சண்டிமல் ஆட்டமிழக்க, 46 ரன்களைச் சேர்த்திருந்த சரித் அசலங்காவும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ், டொமினிக் டார்க்ஸ், பென்னி ஹௌல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், 6ஆவது வீரராக களமிறங்கிய ரவி போபாரா 12 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சர் என 31 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் கலே கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.