ஐபிஎல் 2023: சிஎஸ்கே - லக்னோ ஆட்டம் மழையால் ரத்து!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
காயம் காரணமாக கேஎல் ராகுல் இப்போட்டியில் விளையாடததால் அவருக்கு பதிலாக மனன் வொஹ்ரா அணியில் சேர்க்கப்பட்டு குர்னால் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ் - மனன் வொஹ்ரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேயர்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, மனன் வொஹ்ரா 10 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் குர்னால் பாண்டியா முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் 6 ரன்களிலும், கரண் சர்மா 9 ரன்களிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் லக்னோ அணி 44 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்த ஆயூஷ் பதோனி - நிக்கோலஸ் பூரன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஒருகட்டத்திற்கு மேல் ஆயுஷ் பதோனி பவுண்டரிகளாக விளாசி அசத்தினார். பின் 20 ரன்களைச் சேர்த்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிக்கோலஸ் பூரன், மதிசா பதிரானாவிடம் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஆயூஷ் பதோனி 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் விளையாடி வந்த கிருஷ்ணப்பா கவுதம் விக்கெட்டை இழக்கை பதிரானா கைப்பற்றினார்.
அச்சயமத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் 19.2 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களைச் சேர்த்திருந்தது. இதில் அதிரடியாக விளையாடி வந்த ஆயூஷ் பதோனி 4 சிக்சர்கள், 2 பவுண்டரி என 59 ரன்களுடன் களத்தில் இருந்தார். சிஸ்கே தரப்பில் மொயின் அலி, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரானா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின்னும் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டி முடிவு எட்டப்படாமல் நிறுத்தப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிபட்டியளில் 5 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என மொத்தம் 11 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும், லக்னோ அணி அதே புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.