ஐஎல்டி20: கிறிஸ் லின் அதிரடியில் கோப்பையை தட்டித்தூக்கியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!

Updated: Mon, Feb 13 2023 10:46 IST
Lynn's Heroics Help Adani Gulf Giants Claim Title In Inaugural ILT20 (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐஎல்டி20 தொடரின் முதலாவது சீசன் நேற்றுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இறுதிப்போட்டியில் காலின் முன்ரோ தலைமையிலான டெஸர்ட் வைப்பர்ஸ் அணி, ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் விளையாடிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் நட்சத்திர வீரர்களான முஸ்தஃபா, அலெக்ஸ் ஹேல்ஸ், கேப்டன் காலின் முன்ரோ ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய வநிந்து ஹசரங்கா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், 27 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 55 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியில் ஜேம்ஸ் வின்ஸ், காலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான கிறிஸ் லின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

தொடர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிறிஸ் லின் 72 ரன்களைக் குவிக்க, எராஸ்மஸ் 30, ஹெட்மையர் 25 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியை வீழ்த்தியதுடன், ஐஎல்டி20 தொடரின் அறிமுக தொடரிலேயா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை