வினோத் காம்ப்ளியின் கோரிக்கைக்கு கிடைத்தது பலன்!

Updated: Tue, Aug 23 2022 20:45 IST
Image Source: Google

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி, தனது வாழ்வாதாரத்திற்காக வேண்டி உருக்கமான ஒரு கோரிக்கையை மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் முன்வைத்திருந்தார். 

தன் குடும்பமே இப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுத்து வரும் மாதாந்திர ஓய்வூதியமான ரூ.30 ஆயிரத்தை மட்டுமே நம்பி இருப்பதாகவும் காம்ப்ளி தெரிவித்திருந்தார். இப்போதைக்கு தனக்கு வேண்டியது ஒரே ஒரு வேலைதான் எனவும் அந்த பேட்டியில் அவர் சொல்லி இருந்தார்.

பல இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறன் மூலம் வறுமையை விரட்டி அடித்ததாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் காலம் இது. அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்தும், நிதி சிக்கலில் கிரிக்கெட் வீரர்கள் சிலர் திண்டாடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் காம்ப்ளி.

இந்திய அணிக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நண்பரும் கூட. ‘அவருக்கா?’ இந்த நிலை என பலரும் வருத்தம் தெரிவித்தனர்.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த முன்னணி தொழிலதிபர் ஒருவர் வினோத் காம்பிளிக்கு பணி கொடுக்க முன்வந்துள்ளார். சயாத்ரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஃபினான்ஸ் பிரிவில் அவருக்கு பணி வழங்குவதாக கூறியுள்ளதால். இதற்காக மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளார். எனினும் இதற்கு காம்பிளியிடம் இருந்து இன்னும் எந்தவித பதிலும் வரவில்லை.

வினோத் காம்பிளி தற்போது டெண்டுல்கர் மிடில் செக்ஸ் குளோபல் அகெடமியில் பணி புரிந்து வருகிறார். இந்த பணியை அவரின் நண்பர் சச்சின் தான் பெற்றுக்கொடுத்தார். இதுமட்டுமல்லாமல் மும்பை மாநில கிரிக்கெட் அணியில் ஏதாவது பயிற்சியாளர் பணி வேண்டும் என காம்பிளி கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை