விஜய் ஹசாரே கோப்பை 2024-25: குல்கர்னி, சௌத்ரி அசத்தல்; அரையிறுதியில் மஹாராஷ்டிரா!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அபிஷேக் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய மஹாராஷ்டிரா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னிலும், அடுத்து வந்த சித்தேஷ் வீர் ரன்கள் ஏதுமின்றியும் என அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அர்ஷின் குல்கர்னி மற்றும் அங்கித் பவ்னே இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களை கடந்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 145 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
பின்னர் 60 ரன்கள் எடுத்த கையோடு அங்கிப் பவ்னே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாது 15 ரன்களுக்கும், அஸிம் காஸி 2 ரன்களுக்கும் என் ஆட்டமிழந்தனர். ஒருப்பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த அர்ஷின் குல்கர்னி சதமடித்து அசத்தினார். பின்னர் 107 ரன்களைச் சேர்த்த நிலையில் அவரும் விக்கெட்டை இழக்க, இறுதியில் நிகில் நாய்க் 52 ரன்களையும், சத்யஜீத் பச்சவ் 20 ரன்களையும் சேர்க்க மஹாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்களைக் சேர்த்தது.
இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் அபிஷேக் சர்மா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிப்ரஷிம்ரன் சிங் 14 ரன்களில் விக்கெட்டை இழகக், அவரைத்தொடர்ந்து 19 ரன்களை எடுத்த நிலையில் அபிஷேக் சர்மாவும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அம்ன்மோல்ப்ரீத் சிங் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய நெஹால் வதேரா, அன்மொல் மல்ஹோத்ரா, நமந்தீர் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
பின் 48 ரன்களில் அன்மோல்ப்ரீத் சிங்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் அர்ஷ்தீப் சிங் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 49 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தானர். இதனால் பஞ்சாப் அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மஹாராஷ்டிரா அணி தரப்பில் முகேஷ் சௌத்ரீ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் மஹாராஷ்டிரா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியதுடன். நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.