சர்வதேச கிரிக்கெட்டை ஆளும் உலக கோப்பை நாயகன் #HappyBirthdayBenStokes
தற்போதைய காலகட்டத்தில் தெறிக்கவிடும் ஆல் ரவுண்டர்களில் ஒருவர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் தனது திறமையால் அடையாளம் காட்டிக் கொண்டவர். அவர்தான் பென் ஸ்டோக்ஸ். சர்வதேச கிரிக்கெட்டில் இவர் செய்த சம்பவம் ஏராளம்.
கடந்த1991 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரத்தில் பிறந்த இவர், தனது பன்னிரண்டாவது வயதில் வடக்கு இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து அங்கிருந்து உள்ளூர் அணிகளின் சார்பாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். வலது கை பவுலிங்கும் இடது கை பேட்டிங்கும் ஸ்டோக்ஸை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றது.
ஸ்டோக்சினுடைய தந்தை ஜெரார்டு ஸ்டோக்ஸ், ரக்பி கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார். ஜெரார்டு ஸ்டோக்ஸ் இங்கிலாந்திலுள்ள ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட காரணத்தினால் பென் ஸ்டோக்ஸ் இளம் வயதிலேயே இங்கிலாந்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்டோக்ஸ் 2009 ஆம் ஆண்டில் தி ஓவலில் டர்ஹாமிற்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். மேலும், மிகவும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட்டர் மார்க் ராம்பிரகாஷின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 2009 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் அண்டர் 19 அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் இவர் அரைசதம் அடித்தும், சில விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
பின்னர் இவர் 2010 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட தொடரில் விளையாடினார். அப்போது ஸ்டோக்ஸ் இந்தியா யு 19 அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார்.
அதைத்தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். அப்போது அரைசதமும் ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இதயடுத்து அயர்லாந்து, இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து சார்பில் தொடர்ந்து ஆட தொடங்கினார்.
2015 அன்று, ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கின் மெல்போர்ன் ரெனிகேட்ஸில் சில போட்டிகளில் ஜெஸ்ஸி ரைடருக்கு மாற்றாக சேர்ந்தார். 2017 அன்று, ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அதன்பின் 2017 ஆண்டு ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரின் ரைசிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ் அணியினால் ரூ 14.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
தொடர்ச்சியாக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் பேசப்படும் நபராக மாறியது என்றால் அது 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் தான்.
கை நழுவிச் சென்ற கோப்பையை வெல்வதற்காக இறுதிவரை போராடிய பென் ஸ்டோக்ஸ், அதை சாதித்தும் காட்டினார். இவரது அபார ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆஷாஸ் தொடர் இவரது கிரிக்கெட் வாழ்க்கையை வேறு கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. ஆம் லீட்ஸில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் தோல்வியை நோக்கி சென்ற இங்கிலாந்து அணியை இழுத்து வெற்றி பெற வைத்தார்.
அப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 135 ரன்களை விளாசி இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற வைத்தார்.
இதுவரை இங்கிலாந்து அணிக்காக பென் ஸ்டோக்ஸ் 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4631 ரன்களையும், 163 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேபோல் 98 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2817 ரன்களையும், 74 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் 32 40 ஐபிஎல் போட்டியில் விளையாடி 852 ரன்களையும், 19 விக்கெட்டுகளையும் .
பென் ஸ்டோக்ஸின் அபாரமான ஆட்டத்தின் மூலம் 2019ஆம் ஆண்டின் பிசிசி சிறந்த விளையாட்டு வீரர் விருது, பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஒபிஇ விருது, 2020ஆம் ஆண்டிற்கான நியூ இயர் விருது, விஸ்டன் வழங்கிய உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது என பல விருதுகளையும் பெற்று அசத்தியுள்ளார்.
தற்போதை கிரிக்கெட் காலகட்டத்தில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக பார்க்கப்படும் பென் ஸ்டோக்ஸ், இன்று 30ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.