ஆஷஸ் தொடரில் மார்கஸ் ஹாரிஸ் தொடக்க வீரராக களமிறங்குவார் - ஜார்ஜ் பெய்லி!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் டிசம்பர் 8ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் டேவிட் வார்னருடன் இணைந்து களமிறங்கப்போகும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பெயரை ஜார்ஜ் பெய்லி ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பெய்லி "கடந்த காலங்களில் ஹாரிஸுக்கு குறிப்பிட்ட அளவிலான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் அவர் வந்ததும் போனதுமாக இருந்திருக்கிறார். எனவே, நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு ஒன்றை அவர் பெறுவதைத் தவிர வேறு எதையும் நாங்கள் விரும்பமாட்டோம்.
அவரது நிலையான ஆட்டம் எங்களுக்குப் பிடிக்கிறது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் நிறைய ரன்களைக் குவிப்பவராக இருக்கிறார். மேலும் இங்கிலாந்து சென்று லெயிசெஸ்டர் அணிக்காக சிறப்பாக விளையாடியது எங்களைக் கவர்ந்தது" என்று தெரிவித்தார்.
Also Read: T20 World Cup 2021
கடந்த மாதம் நடைபெற்ற ஷெபீல்ட் ஷீல்ட் ஆட்டத்தில் ஹாரிஸ் 137 ரன்கள் விளாசினார். ஆனால், அதன்பிறகு மற்ற 3 இன்னிங்ஸில் அவர் 9, 1 மற்றும் 0 ரன்களே எடுத்துள்ளார். எனினும், கடந்த 3 சீசன்களாக விக்டோரியா அணிக்கு முறையே 63, 49 மற்றும் 70 ஆக பேட்டிங் சராசரி வைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கவுன்டி கிரிக்கெட்டில் லெய்செஸ்டர் அணிக்காக 655 ரன்கள் குவித்து சராசரி 55 ஆக வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.