மயங்க் யாதவ் தான் யார் என்பதை இந்த உலகிற்கு காட்டிவிட்டார் - நிக்கோலஸ் பூரன்!

Updated: Sun, Mar 31 2024 13:13 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ் இணை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையிலும், இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்து தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன், “இது எங்களுக்கு ஒரு அற்புதமான தொடக்கம். சொந்த ரசிகர்கள் முன்பு வெற்றிபெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்போட்டிக்கு முன்னதாக நாங்கள் பல ஆலோசனைகளில் ஈடுபட்டோம். அதில் நல்ல தொடக்கத்தை பெறுவது குறித்தும், சரியான பிளேயிங் லெவனை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசித்தோம். இந்த மைதானத்தில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நல்ல இலக்கை நிர்ணயித்தோம். 

ஏனெனில் இது மிகவும் பெரிய மைதானம். இங்கு ஒரு பக்கம் பவுண்டரி எல்லை பெரியது, மற்றொரு பக்கம் குறுகியதுமான தன்மையைக் கொண்டது. இதனால் ஒரு பக்கம் எளிதாக விக்கெட்டுகளை பெறமுடியும், அதேசமயம் ஒருபக்கம் அதிக பவுண்டரியை கொடுக்க முடியும். அதன் காரணமாக இப்போட்டி பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சவாலான போட்டியாக அமைந்தது. 

இப்போட்டியில் ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், எங்களது வெற்றியையும் ஏறத்தாழ சிதைத்துவிட்டனர். ஆனால் சரியான நேரத்தில் மயங்க் யாதவ் அபாரமாக பந்துவீசியதுடன், பஞ்சாப் கிங்ஸின் விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் நாங்கள் இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம். இந்த வெற்றிக்கு முழு காரணமும் மயங்க் யாதவ் வீசிய அந்த நான்கு ஓவர்கள் தான்.

மயங்க் யாதவ் போன்ற ஒரு இளம் வீரரிடம் இருந்து இப்படி ஒரு செயல்பாடு வெளிப்படுவது என்பது அனைவரையும் உத்வேகப்படுத்த கூடிய ஒன்றாகும். அவர் எவ்வளவு சிறந்த வீரர் என்பதை இந்த உலகிற்கு காட்டிவிட்டார். அதிலும் அவர் வேகமானவர் மட்டுமல்ல துல்லியமாக பந்துகளை வீச கூடியவர் என்பதையும் இதன் மூலம் நிருபித்துள்ளார். இப்போட்டியில் அனைத்து வீரர்களும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை