ஜானி பேர்ஸ்டோவால் எந்த பிட்சிலும் ரன்களை சேர்க்க முடியும் - பிரண்டன் மெக்கல்லம்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்டெ டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்த அந்த அணி, அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணியில் பென் டக்கெட், ஒல்லி போப் ஆகியோரைத் தவிர மற்ற பேட்டர்கள் சோபிக்க தவறி வருகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் நடப்பு தொடரில் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு முறை கூட அரைசதத்தை கடக்காமல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இருப்பினும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்கி வருகிறது. மேலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரும் அவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை இங்கிலாந்து அணிக்காக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜானி பேர்ஸ்டோவ் 12 சதம், 26 அரைசதங்கள் என மொத்தம் 5,906 ரன்களை குவித்துள்ளார். இருப்பினும் இந்திய அணிக்கெதிரான தொடரில் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் அவர் மீது முன்னாள் வீரர்கள் பல்வேறு விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர். இதனால் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் இடம்பிடிப்பாரா என்ற கேள்வியும் எழத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பேர்ஸ்டோவ் குறித்து பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம், “இந்த டெஸ்ட் தொடரில் ஜானி பேர்ஸ்டோவ் எதிர்பார்த்த அளவிற்கான ரன்களை இதுவரை சேர்க்கவில்லை. அவர் மிகவும் சாதாரணமாக ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் அவர் பவர் ஷாட்களை விளையாடக் கூடிய கிரிக்கெட் வீரர் என்பதை மறந்துவிட கூடாது. இதனால் அவரைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை. அவர் இங்கிலாந்து அணிக்காக எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை நான் அறிவேன். அவரின் மோசமான ஃபார்ம் என் கண்களை மறைக்காது.
அவரால் எந்த பிட்சிலும் ரன்களை சேர்க்க முடியும். தற்போது அவருக்கு தேவையான நம்பிக்கை மற்றும் மன உறுதியை தான் நாங்கள் அளிக்க வேண்டியுள்ளது. வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை பற்றி அவர் கவலைப்பட தேவையில்லை. அவரின் முழுவதும் தற்போது இந்திய மண்ணில் ரன்கள் சேர்ப்பதில் மட்டுமே உள்ளது. வரும் நாட்களில் பேர்ஸ்டோவுடன் கூடுதல் நேரம் செலவழிக்கவுள்ளேன். ஏனெனில் இந்திய மண்ணில் ரன்கள் சேர்ப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அவருடன் அதிக நேரம் செலவிடும் போதுதான் அவரின் நம்பிக்கையை அதிகரிக்க முடியும். அப்படி செய்யும் போது நிச்சயம் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்” என்று தெரிவித்துள்ளார்.