முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரை கடுமையாக விமர்சித்த ரஷித் கான்!
இந்தியாவில் இன்னும் சில தினங்களில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக தகுதிபெற்ற அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ஜாம்பவான் அணிகளாக கருதப்படும் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் ஆஃப்கானிஸ்தான் வளர்ந்துள்ளதை சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம்.
உள்நாட்டு போருக்கு இடையே, ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி எட்டி உள்ள உயரங்கள் மிகவும் அசாதாரணமான ஒன்று. கிரிக்கெட்டில் இரண்டு முறை உலக கோப்பையை வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி சுற்றில் விளையாடும் பொழுது, ஆஃப்கானிஸ்தான் அணி கடந்த சில உலகக் கோப்பைகளாக நேரடியாக தகுதி பெற்று அசத்தி வருகிறது.
மேலும் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் உலகெங்கும் நடக்கும் டி20 தொடர்களில் நல்ல மதிப்புடையவர்களாக விளங்கி விளையாடி வருகிறார்கள். அவர்களுடைய தேவை உலக டி20 கிரிக்கெட் தொடர்களுக்கு இருக்கிறது என்பது அவர்களுடைய வளர்ச்சிக்கான சான்று. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் அடையாளமாக ரஷித் கான் இருந்து வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல், உலகெங்கும் நடந்து வரும் டி20 தொடர்களில் மிக முக்கியமான வீரராகப் பார்க்கப்படுகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டன் ஹரிதிக் பாண்டியாவுக்கு இணையான சம்பளம் பெறுவதோடு, துணை கேப்டனாக வழிநடத்தும் அளவுக்கு இருக்கிறார். இதன் காரணமாக நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் ரஷித் கான் பேட்டர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஷபிக் ஸ்டானிக்ஸாய் குறித்து ரஷித் கான் கடுமையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பான விஷயமாக மாறி இருக்கிறது.
அதன்படி ரஷித் கான் தனது பதிவில், “இதுவரை நடந்த எல்லா மெகா நிகழ்வுகளிலும் இதுவே சிறந்த மற்றும் பொருத்தமான அணியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். மேலும் இந்த மாதிரி சிறந்ததை வழங்க முடியும் என்று நினைக்கிறேன். உங்கள் நிர்வாகத்தின் போது கடந்த காலங்களில் இப்படியான பெரிய நிகழ்வுகளில் மோசமான தேர்வுகளில் சமரசம் ஏற்பட்டது. எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள ஷபிக் ஸ்டானிக்ஸாய், “என் அன்பான வீரர் ரஷித் கான் அவர்களுக்கு, உங்களுடைய ட்வீட் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நீங்கள் முன்பு வெளிப்படுத்திய உணர்வுகளுக்கு இது முரணாக இருக்கிறது. எனது பதவி காலத்திற்குப் பிறகு ஏசிபிக்கு நான் செய்த பங்களிப்புகளுக்கு மற்றும் வெற்றிகளுக்கு என்னை நீங்கள் கடந்த காலத்தில் பாராட்டி வெளியிட்ட ட்வீட்டுகள் ஞாபகம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.