ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் ஹீரோ - நாசர் ஹுசைன் பாராட்டு!

Updated: Thu, Nov 16 2023 14:35 IST
ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் ஹீரோ - நாசர் ஹுசைன் பாராட்டு! (Image Source: Google)

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 47, கில் 80, விராட் கோலி 117, ராகுல் 39 ரன்கள் எடுத்த உதவியுடன் 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதன்பின் இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு முக்கிய வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் முடிந்தளவுக்கு போராடியும் 327 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதிகபட்சமாக டெரில் மிட்சேல் 134, கேப்டன் வில்லியம்சன் 69 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்களை சாய்த்தார்.

அந்த வகையில் ஐசிசி நாக் அவுட் போட்டியில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடிக்க உதவி 7 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற முகமது ஷமி தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வருகிறார். அதே போல சச்சினை முந்தி 50 சதங்கள் அடித்து நிறைய உலக சாதனைகள் படைத்த விராட் கோலியும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியதாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஷமி மற்றும் விராட் கோலி ஆகியோர் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றாலும் ரோஹித் சர்மா தான் இந்த வெற்றியின் உண்மையான நாயகன் என்று நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார். குறிப்பாக அழுத்தமான அரையிறுதி போட்டியில புதிய பந்தை ஸ்விங் செய்து மிரட்டலை கொடுக்கக்கூடிய ட்ரெண்ட் போல்ட் போன்ற பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு இத்தொடர் முழுவதும் அபாரமான தொடக்கத்தை கொடுத்து வரும் ரோஹித் சர்மா தான் இந்தியாவின் ஹீரோ என்று பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நாளை தலைப்புச் செய்தியாக விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி ஆகியோர் இருப்பார்கள். ஆனால் இந்த இந்திய அணியின் நிதர்சனமான ஹீரோ மற்றும் இந்த இந்திய அணியின் கலாச்சாரத்தை உண்மையாக மாற்றிய நபர் என்றால் அது ரோஹித் சர்மா தான். குறிப்பாக 2022 டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

அப்போது எங்களுடைய அணியை மாற்ற வேண்டும் என்று ரோகித் சர்மா சொன்னதாக தினேஷ் கார்த்திக் எங்களிடம் சொன்னார். தற்போது அதை செய்து காட்டியுள்ள ரோஹித் சர்மா தான் ரியல் ஹீரோ. லீக் சுற்றில் இந்தியா சோதிக்கப்பட்ட போது நாக் அவுட்டிலும் அதிரடியாக விளையாட முடியுமா? என்ற கேள்வி இருந்தது. அங்கேயும் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட முடியும் என்பதை காண்பித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை