ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!

Updated: Fri, May 03 2024 14:19 IST
Image Source: Google

 

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 51ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

மும்பை இந்திய்ன்ஸ்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றும் ஏறத்தாழ பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் அந்த அணி இனிவரும் போட்டிகளில் எந்தவித பயமும் இன்றி தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, நெஹால் வதேரா, திலக் வர்மா, டிம் டேவிட் போன்ற வீரர்கள் உள்ளனர்.

ஆனால் அந்த அணிக்கு உள்ள மிகப்பெரும் பிரச்சனையே அணியின் பந்துவீச்சு துறைதான். ஏனெனில் அந்த அணியில் ஜஸ்ப்ரீத் பும்ராவை தவிர்த்து மற்ற வீரர்களிடமிருந்து பெரிதளவில் சோபிக்கவில்லை. இதில் ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால் போன்ற வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் ரன்களை கட்டுப்படுத்த தவறிவருகின்றனர். இதனால் அந்த அணி பந்துவீச்சில் கவனம் செலுத்தினால் இப்போட்டியில் வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: இஷான் கிஷான், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நேஹல் வதேரா, டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலின் 2ஆம் இடத்தைப் பொடித்துள்ளது. இதனால் அந்த அணி மேற்கொண்டு 2 வெற்றிகளை பதிவுசெய்தால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

அந்த அணியின் பேட்டிங்கில் பில் சால்ட், சுனில் நரின், ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அணியின் பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஆல்-ரவுண்டர்கள் சுனில் நரின், ஆண்ட்ரே ரஸல் கணிசமான பங்களிப்பை அளிக்கிறார்கள். மேலும் நடத்தை விதிமுறையை மீறியதால் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, அனுகுல் ராய், வருண் சக்ரவர்த்தி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை