ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடவுள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ள காரணத்தால், இப்போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலிலாவது முன்னேற்றமடைய முயற்சிக்கும். இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
மும்பை இந்தியன்ஸ்
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி மூன்று வெற்றி, எட்டு தோல்விகளைச் சந்தித்து 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதிலும் அந்த அணி கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அந்த அணியின் பிளே ஆஃப் கனவும் தகர்ந்துள்ளதுடன், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வேளியேறிய முதல் அணி எனும் மோசமான சாதனையையும் படைத்துள்ளது.
மும்பை அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹல் வதேரா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் போன்ற மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் இருந்தும் குறைந்த அளவிலான இலக்கைக் கூட அவர்கள் எட்ட முடியாமல் தடுமாறி வருகின்றனர். அதேபோல் பந்துவீச்சிலும் அந்த அணி முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளது. பந்துவீச்சில் துஷாராவும், பும்ராவும் மட்டுமே சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றனர். ஹர்திக் பாண்டியா, ஜெரால்டு கோட்ஸி, பியூஷ் சாவ்லா ஆகியோர் விக்கெட்களை வீழ்த்தினாலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹால் வதேரா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஜெரால்டு கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பாட் கம்மின்ஸ் தலைமியிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்விகளைப் பதிவு செய்து 12 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலின் 5ஆம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசன், நிதீஷ் ரெட்டி, அப்துல் சமத் ஆகியோர் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டுவருகின்றனர். அதிலும் குறிப்பாக அந்த அணிக்கு டாப் ஆர்டரில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோரும், மிடில் வரிசையில் நிதீஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் பலமாக உள்ளது.
அதேபோல் அந்த அணியின் பந்துவீச்சில் நடராஜன், புவனேஸ்வர் குமார், கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் சிறந்த 1பார்மில் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். எனவே, இந்த ஆட்டத்திலும் அவர்களிடமிருந்து மிகச்சிறந்த பந்துவீச்சு வெளிப்படக்கூடும். இப்படி பேட்டிங், பந்துவீச்சு என இரு பிரிவிலும் வலிமையாக இருக்கும் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களது சொந்த மண்ணிலேயே வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சென், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், தங்கராசு நடராஜன், ஜெய்தேவ் உனத்கட்.