IND vs NZ, 1st ODI: பிரேஸ்வெல் போராட்டம் வீண்; இந்தியா த்ரில் வெற்றி!

Updated: Wed, Jan 18 2023 21:54 IST
Image Source: Google

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷூப்மன் கில், ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். கேப்டன் ரோஹித் சர்மா 34 ரன்களில் வெளியேறினார்.

அதன்பின்னர் ஷூப்மான் கில்லுடன் இணைந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். அதில் சூர்யகுமார் யாதவ் 31 ரன், ஹர்திக் பாண்ட்யா 28 ரன், வாஷிங்டன் சுந்தர் 12 ரன் சேர்த்தனர். மறுமுனையில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷூப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். 145 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கில் 208 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவ் 5 ரன்னுடனும், ஷமி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல், ஹென்றி சிப்லே தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டெவான் கான்வே 10 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஃபின் ஆலென் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹென்றி நிக்கோலஸ் 18, டேரில் மிட்செல் 9, கேப்டன் டாம் லேதம் 24, கிளென் பிலீப்ஸ் 11 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் 131 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் 7ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மைக்கேல் பிரேஸ்வெல் - மிட்செல் சாண்டனர் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேஸ்வெல் சதமடித்து அசத்த, மறுமுனையில் உறுதுணையாக விளையாடிய மிட்செல் சாண்ட்னர் அரைசதம் கடந்து அசத்தினார். இவர்களது அதிரடியால் நியூசிலாந்து அணி 300 ரன்களையும் கடந்து வெற்றிக்காக போராடியது. அதன்பின் 57 ரன்களில் சாண்டனர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹென்றி ஷிப்லியும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய லோக்கி ஃபர்குசனும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இந்திய அணி தரப்பில் கடைசி ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பிரேஸ்வெல் அதனை சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினார். 

அதன்பின் இரண்டாவது பந்து ஒயிடாக மாற, மீண்டும் வீசப்பட்ட அந்த பந்தில் மைக்கேல் பிரேஸ்வெலின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார் ஷர்துல் தாக்கூர். இதன்மூலம் 49.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதில் இறுதிவரை போராடிய மைக்கேல் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 12 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 140 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்த வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை