ஜெய்ஸ்வாலை சேவக்குடன் ஒப்பிட்டு பாராட்டிய மைக்கேல் வாகன்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்று அசத்தியதுடன், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று தனது இரண்டாவது இரட்டை சதத்தை விளாசினார்.
முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் அவர் இரட்டை சதத்தை அடித்திருந்தார். இதன்மூலம் இளம் வயதில் இரண்டு இரட்டை சதங்களை விளாசிய வீரர்கள் வரிசையில் வினோத் காம்ப்ளி, டான் பிராட்மேன் ஆகியோருக்கு பின் தனது பெயரை ஜெய்ஸ்வால் பதிவுசெய்துள்ளது. அதிலும் அதிரடிக்கு பெயர்போன ஜெய்ஸ்வால் இன்றைய ஆட்டத்தில் 12 சிக்சர்களை விளாசித்தள்ளினார்.
இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் வரிசையில் பாகிஸ்தானின் வசிம் அக்ரமின் சாதனையை சமன்செய்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் எனும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதமடித்த பிறகு, யஷஸ்வி ஜெய்ஸ்வாலை வீரேந்திர சேவாக்குடன் ஒப்பிட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவரது தனது எக்ஸ் பதிவில், “இந்தியாவுக்கு புதிய வீரேந்திர சேவாக் கிடைத்துள்ளார். ஒரு காலத்தில் சேவாக் செய்ததைப் போலவே அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிரடி ஆட்டம் மூலம் பந்துகளை சிதறடிக்கும் ஒரு வீரராக ஜெய்ஸ்வால் இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இவரது பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.