உலக கோப்பையில் இந்தியாவை ஆஸி வீழ்த்தும் - மிட்செல் மார்ஷ் கணிப்பு!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில்அனைத்து அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தீவிரமாக விளையாடி வருகின்றன. இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்திலும், குறிப்பாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவிலும் நடைபெறவுள்ளது.
அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில் தற்போதைய ஐபிஎல்லில் டெல்லி அணியில் இடம்பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா ஆல்-அவுட் செய்து வீழ்த்தும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா தோல்வி அடையாத அணியாக இருக்கும். இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தும். இந்த 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 450 எடுக்கும். அதேசமயம் இந்திய அணி 65 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகும்" என்று கூறியிருக்கிறார். மிட்செல் மார்ஷின் இந்த கருத்திற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர்.