மிட்செல் சாண்ட்னரின் சிஎஸ்கே அனுபவம் எங்களுக்கு உதவும் - டாம் லேதம்!
உலகக் கோப்பையில் இதுவரை நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி நான்கிலுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலிலும் நியூசிலாந்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் இந்தியா அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் நாளை தர்மசாலாவில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இரு அணிகளும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்காததால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய மைதானங்களில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னரின் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு உதவும் என அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து பேசிய அவர், “பல ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை மிட்செல் சாண்ட்னர் வழங்கி வருகிறார். இந்திய ஆடுகளங்களில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளதால் அவருக்கு இந்திய ஆடுகளங்களின் தன்மை குறித்து அனுபவம் இருக்கும். அவர் சென்னை அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடியுள்ளார்.
அதனால் இந்திய ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப அவர் தன்னை எளிதில் மாற்றிக் கொள்வார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவர் இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளார். நாளைய போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னர் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.