ஓய்வு குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட மிதாலி ராஜ்!

Updated: Wed, Jun 08 2022 16:13 IST
Image Source: Google

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய தூணாக விளங்கி வந்தவர் கேப்டன் மிதாலி ராஜ். இவர் இன்று அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஆடிய பெருமையும், சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையும் மிதாலி ராஜ்-யிடம் இருந்து வருகிறது. 39 வயதிலும் அதே உத்வேகத்துடன் ஆடி வந்த இவர், இன்று ஓய்வை அறிவித்திருக்கிறார். இதுகுறித்து உருக்கமான பதிவையும் போட்டுள்ளார்.

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், “உங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மிக உயர்ந்த கவுரவம் என்பதால், இந்தியா ப்ளூஸ் அணிவதற்கான பயணத்தில் ஒரு சிறுமியாக நான் புறப்பட்டேன்.  பயணம் உயர்வும் சில தாழ்வுகளும் நிறைந்தது .  ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு தனித்துவமான ஒன்றைக் கற்றுக் கொடுத்தது மற்றும் கடந்த 23 வருடங்கள் என் வாழ்வில் மிகவும் நிறைவான, சவாலான மற்றும் மகிழ்ச்சியான வருடங்களாக இருந்தன.  

எல்லா பயணங்களையும் போலவே இதுவும் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.  இன்று நான் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறும் நாள் ஒவ்வொரு முறையும் நான் களத்தில் இறங்கும் போது, இந்தியாவின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன்.  மூவர்ணக் கொடியை பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் எப்போதும் மதிக்கிறேன்.  

சில திறமையான இளம் வீரர்களின் திறமையான கைகளில் அணி இருப்பதால், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதால், எனது விளையாட்டு வாழ்க்கைக்கு திரைச்சீலை அமைக்க இதுவே சரியான நேரம் என்று உணர்கிறேன்.

முதலில் ஒரு வீரராகவும் பின்னர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் பிசிசிஐ மற்றும் ஸ்ரீ ஜெய் ஷா சர் (கௌரவச் செயலாளர், பிசிசிஐ)-க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இத்தனை ஆண்டுகள் அணியை வழிநடத்தியது பெருமையாக இருந்தது. இது நிச்சயமாக என்னை ஒரு நபராக வடிவமைத்தது மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட்டை வடிவமைக்க உதவியது. 

இந்தப் பயணம் முடிந்திருக்கலாம், ஆனால் நான் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடவும், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் விரும்புகிறேன். எனது ரசிகர்கள் அனைவருக்கும் சிறப்புக் குறிப்பு, உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி”  என்று தெரிவித்துள்ளார். 

 

கடந்த 1999ஆம் ஆண்டு முதல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக மிதாலி ராஜ் விளையாடி வருகிறார். தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட மிதாலி ராஜ் 23 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார். 232 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவில் மிதாலி ராஜ் 7,805 ரன்கள் எடுத்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் 699 ரன்களும், 59 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 2,364 ரன்களும் எடுத்துள்ளார். 

மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார் மிதாலி ராஜ். மேலும் மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக மிதாலி ஓய்வு பெற்றார். இந்தியாவுக்காக 232 போட்டிகளில் பங்கேற்று 50.68 சராசரியில் 7805 ரன்கள் எடுத்தார்.

சமீபத்திய ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில், மிதாலி தொடர்ந்து ஏழாவது இடத்தைப் பிடித்தார். இதற்கிடையில், பாலிவுட் நடிகை டாப்ஸி பண்ணு, மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ஷபாஷ் மிது என்ற படம் ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை