எம்எல்சி 2023: கான்வே அரைசதம்; எம்ஐ நியூயார்க்கை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!

Updated: Tue, Jul 18 2023 11:28 IST
எம்எல்சி 2023: கான்வே அரைசதம்; எம்ஐ நியூயார்க்கை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்! (Image Source: Google)

அமெரிக்காவில் ஆறு அணிகளை வைத்து மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிக்க, மறுபக்கம் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 8, கோடி செட்டி 12, டேவிட் மில்லர் 17 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த டெவான் கான்வே 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 74 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த மிட்செல் சாண்ட்னர் தனது பங்கிற்கு 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 27 ரன்களைச் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கல் முடிவில் சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூயார்க் அணிக்கு தொடக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் மட்டும் தாக்குப்பிடித்து 48 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் களமிறங்கிய மொனான்க் படேல், ஸ்டீவ் டெய்லர், நிக்கோலஸ் பூரன், டிம் டேவிட், கிரேன் பொல்லார்ட் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் டேனியல் சம்ஸ், முகமது மொஹ்சின் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் ஆணி 17 ரன்கள் வித்தியாசத்தில் எம்ஐ நியூயார்க் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை