MLC 2024: இரத்த காயங்களுடன் வெளியேறிய சான் ஃபிரான்சிஸ்கோ வீரர்; வைரலாகும் காணொளி!
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சியாட்டில் ஆர்காஸ் அணியில் ரியான் ரிக்கெல்டனை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் காரணமாக சியாட்டில் ஆர்காஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கெல்டன் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 89 ரன்களைச் சேர்த்தார். நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் ஸ்பென்ஸர் ஜான்சன், ஆண்ட்ரே ரஸல், கோர்ன் டிரை, சுனில் நரைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியிலும் உன்முக்த் சந்த் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் அவரைத்தவிர்த்து ஜேசன் ராய், சுனில் நரைன், டேவிட் மில்லர், நிதிஷ் குமார் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உன்முக்த் சந்த் அரைசதம் கடந்ததுடன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தாலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இருப்பினும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கெல்டன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரியான் ரிக்கெல்டன் அடித்த பந்து ஒன்று யூனிகார்ன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கார்மி லே ரூக்ஸ்யை காயப்படுத்திய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதன்படி கார்மி வீசிய இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தை ரியான் ரிக்கெல்டன் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து நேராக பந்துவீச்சாளரை நோக்கி செல்ல, அதனை கார்மி பிடிக்க முற்பட்டார். ஆனால் பந்து அவர் நினைத்தாதை விட வேகமாக வந்ததுடன், அவரது தலை பகுதியையும் தாக்கியது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
பந்து தாக்கியதுமே நிலை தடுமாறிய கார்மி லே ரூக்ஸ் மைதானத்திலேயே படுத்துவிட்டார். அதன்பின் அவரது தலைப்பகுதியில் இரத்தம் வந்ததையடுத்து அணியின் மருத்துவர்கள் உடனடியாக களத்திற்கு வந்து கார்மி லே ரூக்ஸிற்கு தேவையான முதலுதவியை செய்தனர். இதனையடுத்து கார்மி மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் கார்மி லே ரூக்ஸ் காயமடைந்த காணொளியானது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.