எம்எல்சி 2025: நைட் ரைடர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது நியூயார்க்
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூயார்க் அணியில் குயின்டன் டி காக் ரன்கள் ஏதுமின்றியும், மொனாங்க் படேல் 13 ரன்னிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தஜிந்தர் தில்லானும் 2 ரன்களில் நடையைக் கட்டினார்.
அவர்களைத் தொடர்ந்து கேப்டன் நிக்கோலஸ் பூரன் 30 ரன்களுக்கும், மைக்கேல் பிரேஸ்வெல் 18 ரன்களுக்கும், ஜார்ஜ் லிண்டே 13 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கீரன் பொல்லார்ட் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் அரைசதம் கடந்த கையோடு 50 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக எம்ஐ நியூயார்க் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் வான் சால்விக் 3 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர், கோர்ன் ட்ரை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் தரப்பில் தொடக்க வீரர்கள் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 9 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 21 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய உன்முக்த் சந்த் - ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய உன்முக்த் சந்த் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் அவருக்கு துணையாக விளையாடி வந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து அசத்திய உன்முக்த் சந்தும் 59 ரன்களைச் சேர்த்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். இதன் காரணமாக நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் எம்ஐ நியூயார்க் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்தது. அதேசமயம் நைட் ரைடர்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.