எம்எல்சி 2025: சூப்பர் கிங்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி யூனிகார்ன்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Sat, Jul 05 2025 12:02 IST
Image Source: Google

எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இறுதிவரை போராடிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் அதிர்ச்சி தோல்வியைத் சந்தித்துள்ளது. 

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 25ஆவது லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய ஃபின் ஆலன், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ ஷார்ட் - ஹசன் கான் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் மேத்யூ ஷார்ட் அரைசதம் கடந்தும் அசத்தினார். அதேசமயம் ஹசன் கான் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 80 ரன்களைச் சேர்த்திருந்த மேத்யூ ஷார்ட்டும் ஆட்டமிழந்தார். இதனால் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை மட்டுமே சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணியில் ஸ்மித் படேல் 8 ரன்களுக்கும், கேப்டன் டூ பிளெசிஸ் ஒரு ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 13 ரன்களுக்கும், சாய்தேஜா முக்கம்ல்லா 34 ரன்களிலும், டோனவன் ஃபெரீரா 39 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது களத்தில் இருந்த முகமது மொஹ்சின் மற்றும் கல்வின் சால்வேஜ் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினர். 

Also Read: LIVE Cricket Score

ஆனால் இன்னிங்ஸின் கடைசி பந்தில் சால்வேஜ் ரன் அவுட்டாக, சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. யூனிகார்ன்ஸ் தரப்பில் பிராடி கோச் மற்றும் ரொமாரியோ ஷெஃபெர்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் யூனிகார்ன்ஸ் அணி நடப்பு எம்எல்சி தொடரின் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை