அவருடைய பலவீனத்தை கண்டறிவது கடினம் - சூர்யகுமார் யாதவ் குறித்து மொயீன் அலி!

Updated: Tue, Nov 08 2022 21:19 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றின் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 

அதில் வெல்வதற்காக இப்போட்டி நடைபெறும் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் வெற்றி நடைக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக ரன்களைக் குவித்து கருப்பு குதிரைகளாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெரும்பாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், எதிரணி பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியாக மைதானத்தின் நாலாபுறங்களிலும் சுழன்றடிக்கும் சூரியகுமார் யாதவ் மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை விளாசி வருகிறார்.

அதிலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியே தடுமாறிய நிலையில் அவர் மட்டும் வேறு ஏதோ பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் விளையாடுவது போல் அபாரமாக செயல்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இந்த வருடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000* ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்து உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் அபாரமாக செயல்படுவார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

ஏனெனில் கடைசியாக கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்று கோப்பையை கைப்பற்றிய இந்தியா 3ஆவது போட்டியில் 216 ரன்களை சேஸிங் செய்யும் போது 31/3 என தடுமாறி தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆனால் அப்போது தனி ஒருவனாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் 14 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 117 ரன்களை விளாசிய போதிலும் இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்நிலையில் அப்போட்டியில் தம்மிடம் கடைசியில் அவுட்டாவதற்கு முன்பாக சூரியகுமார் யாதவ் தன்னுடைய பவுலிங்கை கொலை செய்யும் வகையில் அடித்து நொறுக்கியதாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி நினைவு கூர்ந்துள்ளார். தங்களது மண்ணில் அப்போட்டியிலேயே தம்மை வெளுத்த அவர் இப்போட்டியில் என்ன செய்யப் போகிறாரோ என்ற வகையில் அரையிறுதிக்கு முன்பாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அப்போட்டியில் அவரை அவுட் செய்வதற்கு முன்பாக என்னுடைய பவுலிங்கை கொலை செய்து விட்டார். அவர்களுக்கு நிறைய ரன்கள் தேவைப்பட்ட போது அவர் இந்தியாவை வெற்றியின் அருகே அழைத்துச் சென்றார். நல்ல வேலையாக கடுமையாக முயற்சித்து நாங்கள் அவரை அவுட் செய்தோம். ஆனால் அன்று அவர் அபாரமாக விளையாடினார். அன்று அவருடைய சில ஷாட்கள் என் வாழ்விலேயே நான் பார்த்த சிறந்தவற்றில் ஒன்றாக அமைந்தது. 

அந்த வகையில் அவர் ஒரு அற்புதமான வீரர் என்பதுடன் உலகிலேயே சிறந்தவர் என்று நினைக்கிறேன். சொல்லப்போனால் டி20 கிரிக்கெட்டை அவர் மற்றுமொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். மேலும் யாருக்கு எதிராக பந்து வீசக்கூடாது என்று என்னிடம் நீங்கள் கேட்டால் அவர் தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருவார். அவர் சிறப்பாக விளையாடும் போது அவருடைய பலவீனத்தை கண்டறிவது கடினமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை