இந்திய அணியில் இவர் தான் என்னுடைய ஃபேவரைட் - மொயீன் அலி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர், குழந்தை பிறப்பு காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் புதிய துணை கேப்டனாக ஆல்ரவுண்டர் மொயீன் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைக்கேப்டன் பதவி ஏற்றதை தொடர்ந்து தற்போது தான் எவ்வாறு செயல்பட போகிறேன் என்பது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
அதில் பேசிய மோயீன் அலி, “இங்கிலாந்து அணிக்காக எந்த ஒரு வடிவத்திலும் கேப்டன் பதவியோ அல்லது துணை கேப்டன் பதவியோ கிடைப்பது மிகப்பெரிய கவுரவம். அந்த வகையில் எனக்கு துணை கேப்டன் பதவி கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. இது ஒரு அற்புதமான தருணம்.
நான் இந்த நான்காவது போட்டியில் சிறப்பாக விளையாட ஆர்வமாக இருக்கிறேன். பட்லர் அணியில் இருந்து வெளியேறி உள்ளதால் தற்போது எனக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. இதனை நான் சரியாக பயன்படுத்துவேன். அஸ்வின் அடுத்த போட்டியில் விளையாடுவது இந்திய அணிக்கு பலம் தான். அவர் உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரர் என்பது நாம் அறிந்ததே.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
அதேபோன்று என்னைப்பொறுத்தவரை ஜடேஜா ஒரு சிறப்பான வீரர். உலகின் எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு அணியிலும் விளையாடத் தகுதியானவர் அவர். நான் என்னுடைய அணியை தேர்வு செய்தால் நிச்சயம் ஜடேஜாவுக்கு எப்போதும் இடமுண்டு. இந்திய வீரர்களில் அவர் என்னுடைய பேவரைட் வீரர்” என்று தெரிவித்துள்ளார்.