மொயின் அலிக்கு இங்கிலாந்தின் உயரிய விருது!
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு கிரிகெட்டில் ஆற்றிவரும் சேவைக்கு ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஓபிஇ’ விருது வழங்கப்பட உள்ளது .
ராணியின் பிறந்தநாள் அன்று கௌரவிக்கும் விருதுப் பட்டியலில் மொயின் அலியும் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தனது 16 வருட கிரிக்கெட் வாழ்வில் 225 போட்டிகளில் நாட்டுக்காக விளையாடியுள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
34 வயதான மொயின் அலி, கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 64 டெஸ்ட் போட்டிகளில் 195 விக்கெட்டுகள், 2914 ரன்களை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு முக்கியமானது. இதனால் அவருக்கு ‘ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய மொயின் அலி “கண்டிப்பாக இந்த கௌரவம் முக்கியமானது. இந்த விருதைப் பெற்றுக் கொள்வதால் எனது பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். அதனாலயே இந்த விருதைப் ஆவலாக பெற்றுக்கொள்வேன்.
முன்னுதாரணம் என்ற வார்த்தையை உபயோகிக்க எனக்கு பிடிக்காவிட்டலும் என்னைப் பார்த்து மக்கள் உத்வேகமடைந்திருந்தால் மகிழ்ச்சிதான். எனது பின்னணி, விளையாடும் முறை, கிரிக்கெட்டுக்கு வந்த விதம் ஆகிய ஏதோவொன்று மக்களுக்கு என்னிடம் பிடித்திருக்கலாம். குறிப்பாக, நகரித்தின் உட்பகுதியில் இருக்கும் மக்கள் என்னை எளிதாக அவர்களுடன் தொடர்பு படுத்திக்கொண்டிருப்பார்கள்.
குறிப்பிட்ட எல்லை வரைக்கும் எனக்கு ரோல் மாடல் என்ற வார்த்தை பிடிக்காவிட்டாலும், எனது பங்கு என்ன, என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என தெரிவித்துள்ளார்.