இந்திய அணியில் இடம்பிடிக்க இதை செய்ய வேண்டும் - அசாரூதீன் கருத்து!
இந்திய அணி வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறது. இதில் இந்திய அணி யின் பிளேயிங் லெவனில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
புஜாரா ஃபார்ம்க்கு திரும்பியுள்ளதால், அவரது இடம் உறுதி. இதனால் ரஹானேக்கு பதில் ஹனுமா விஹாரிக்கு இடம் கிடைக்குமா, இல்லை ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் விஹாரி கடைசியாக விளையாடிய 3 டெஸ்ட் இன்னிங்சில் 31, 35 மற்றும் 58 ரன்கள் அடித்திருந்தார்.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ஹனுமா விஹாரி என்ற செய்யவேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரர் அசாரூதீன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அசாரூதீன், “ஹனுமா விஹாரிக்கு இந்திய அணியில் இடம் வேண்டம் என்றால், அவருக்கு கிடைக்கும் வாய்ப்பில் சதம் அடிக்க வேண்டும். 50 ரன்கள், 60 ரன்கள் அடித்துவிட்டு ஆட்டமிழந்தால், நிச்சயம் வேலைக்கே ஆகாது. ஹனுமா விஹாரி ஒரு சிறந்த வீரர்.
இந்திய அணிக்காக நிறைய விளையாட வேண்டும் என்றால், தொடர்ந்து பெரிய ஸ்கோர்களை அடிக்க வேண்டும்” என்று அசாரூதீன் தெரிவித்துள்ளார்.
விஹாரி 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அறிமுக போட்டியில் விஹாரி அரைசதம் அடித்தார். இந்த 4 ஆண்டுகளில் விஹாரி வெறும் 15 டெஸ்ட் போட்டியில் தான் இந்தியாவுக்காக களமிறங்கினார். இதில் 808 ரன்கள் அடித்துள்ளார். இதில் 5 அரைசதங்களும், ஒரு சதம் மட்டுமே அடங்கும்.
ஆஸ்திரேலியாவில் ஒரு முறை தொடக்க வீரராக 2018 மெல்போர்ன் டெஸ்டில் களமிறங்கிய விஹாரி, 66 பந்துகளில் 8 ரன்கள் அடித்தார். இதே போன்று 2020 ஆம் ஆண்டு அதே ஆஸ்திரேலியாவில் அஸ்வினுடன் இணைந்து போட்டியை டிரா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.