PAK vs BAN: சதமடித்து அசத்தியதுடன் சாதனையையும் படைத்த முகமது ரிஸ்வான்!

Updated: Thu, Aug 22 2024 22:16 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது தொடக்கத்திலேயே சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து தடுமாறியது.

அதன்பின் இணைந்த அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் மற்றும் விக்கெட் கீப்பர் பெட்டர் முகமது ரிஸ்வான் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். இருவரும் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு 5ஆவது விக்கெட்டிற்கு 240 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

அதன்பின் 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சௌத் ஷகீல் தனது விக்கெடை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ரிஸ்வான் 150 ரன்களைக் கடந்ததுடன், ஆட்டமிழக்காமல் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 171 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியானது 446 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. 

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் 171 ரன்களைச் சேர்த்ததன் மூலம் பாகிஸ்தான் அணிக்காக புதிய மைல் கல் ஒன்றையும் எட்டியுள்ளார். அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த பாகிஸ்தானின் ஐந்தாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எனும் பெருமையை ரிஸ்வான் பெற்றுள்ளார். இவருக்கு முன், இம்தியாஸ் அகமது, தஸ்லீம் ஆரிப், ரஷித் லத்தீப், கம்ரான் அக்மல் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேற்கொண்டு பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக, டெஸ்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை எட்டிய வீரர்கள் அடிப்படையிலும் முகமது ரிஸ்வான் மூன்றாவது இடத்தை எட்டியுள்ளார். இதன்மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வடிவத்தில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இவருக்கு முன், தஸ்லீம் ஆரிப் 1980ஆம் ஆண்டில் ஆட்டமிழக்காமல் 210 ரன்களும், இம்தியாஸ் அகமது 1955ஆம் ஆண்டில் 209 ரன்களும் எடுத்திருந்தது தான் இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை