ஷமியின் துல்லியமான பந்துவீச்சு அபாரமானது - ஈயான் மோர்கன்!

Updated: Sat, Nov 18 2023 11:37 IST
Image Source: Google

உலக கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக எதிர்பார்த்து இருந்த உலகக் கோப்பையின் இறுதி போட்டி நாளை குஜராத் அஹ்மதாபாத் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்திய அணியை எடுத்துக் கொண்டால் எல்லா துறைகளிலும் மிக வலுவான அணியாக இருக்கிறது. மேலும் வீரர்களிடம் நல்ல நம்பிக்கை காணப்படுகிறது. அதேபோல் அணி சூழல் மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கிறது.

ரோஹித் சர்மா கேப்டனாக மட்டும் இல்லாமல் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்திக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பேட்டிங்கில் உண்டாக்கும் தாக்கம் இந்திய அணிக்கு பெரிய உதவியாக இருக்கிறது.

அவர் கொடுக்கின்ற தொடக்கத்தை வைத்துக்கொண்டு மற்றும் ஒரு அனுபவ நட்சத்திர வீரர் விராட் கோலி மிகப்பெரிய ரன்களை குவித்து எல்லாவற்றிற்கும் அர்த்தம் சேர்க்கிறார். அவர் தன்னுடைய தனிப்பட்ட ஸ்டிரைக் ரேட்டை பொருட்படுத்தாமல், அணி நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்றபடி பொறுமையாக இருந்து செய்கிறார்.

இன்னொரு பக்கத்தில் பந்துவீச்சில் முகமது ஷமி மிகப் பெரிய ஆயுதமாக மாறி இருக்கிறார். அவர் ஆறு போட்டிகளில் மட்டும் தற்பொழுது விளையாடி 23 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். இதன் மூலம் அவரே அதிக விக்கெட் கைப்பற்றியவராகவும் இந்த உலகக் கோப்பை தொடரில் இருக்கிறார்.

முகமது ஷமி குறித்து பேசிய ஈயான் மோர்கன், “நான் பல ஆண்டுகளாக அவரை எதிர் கொண்டு விளையாடி இருக்கிறேன். அவர் பந்துவீச்சில் உண்டாக்கும் துல்லியம் மிக அபாரமாக இருந்து வருகிறது. அவர் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி துல்லியத்தை காத்து வருவது அபாரமானது. பந்தை சீன் மற்றும் காற்றில் நகர்த்த அவர் கொண்டிருக்கும் கட்டுப்பாடு நம்ப முடியாத ஒன்று.

ஒருநாள் கிரிக்கெட்டில் 57 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகள் என்பது கேள்விப்படாத ஒன்று. குறிப்பாக நாக் அவுட் போட்டியில் அழுத்தம் இருக்கும். அவர் அங்கு வந்து அட்டகாசப்படுத்தி இருக்கிறார். திடீரென்று உள்ளே வந்து விக்கட்டுகளை கைப்பற்றினார். அவர் அதை மீண்டும் மீண்டும் செய்தார். ரோஹித் சர்மா இப்படி ஒரு வீரரை வைத்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய மதிப்பையும் பலத்தையும் கொண்டு வருகிறது” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை