மீண்டும் காயமடைந்த முகமது ஷமி; இந்திய அணிக்கு திரும்புவதில் சிக்கல்!

Updated: Wed, Oct 02 2024 11:33 IST
Image Source: Google

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது சமீபத்தில் முடிவடைந்தது. இத்தொடரின் முடிவில் இந்திய அணியானது இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தில் வீழ்த்தி தொடரை வென்று அசத்தியது. 

இதனையடுத்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு இவ்விரு அணிகளும் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 

இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருவதுடன், இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும், எந்தெந்தெ வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்தார். அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர், நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடர் மற்றும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார்.

பின்னர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது காயத்தில் இருந்து மீளும் முயற்சியில் ஈடுபட்டிருந்த முகமது ஷமி, வங்கதேச டெஸ்ட் தொடரிலேயே கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் அவரால் இத்தொடரில் இடம்பிடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் தான் தற்சமயம் என்சிஏவில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த முகமது ஷமி மீண்டும் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பிரபல செய்தி ஊடகம் வாயிலாக என்சிஏவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,  “காயத்தில் இருந்து மீண்டுவரும் முகமது ஷமி என்சிஏவில் மீண்டும் தனது பந்துவீச்சைத் தொடங்கினார். இதனால் அவர் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எண்ணினோம். ஆனால் அவரின் முழங்காலில் மீண்டும் காயம் ஏற்பட்டது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து ஷமிக்கு பிசிசிஐ மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இருப்பினும் அவர் தனது காயத்தில் இருந்து மீள்வதர்கு சில வாரங்கள் தேவைப்படும் என்று மருத்துவர்கல் மதிப்பிடுகின்றனர். இது என்சிஏ மருத்துவக் குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக முகமது ஷமிக்காக வேலை செய்துவருகிறார்கள். அவர்கள் சிறந்த பணிச்சுமை மேலாண்மை அமைப்பைக் கொண்டுள்ளனர். ஷமியை விரைவில் திரும்ப தயார்படுத்த மருத்துவக் குழு முயற்சித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளர். 

Also Read: Funding To Save Test Cricket

இதன் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் முகமது ஷமி இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. மேற்கொண்டு அவரது காயம் குணமடைய 6 முதல் 7 வாரங்கள் ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள காரணத்தால் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் முகமது ஷமி பங்கேற்பது தற்சமயம் சந்தகேமாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை