இங்கிலாந்து புறப்படும் முகமது ஷமி; இங்கிலாந்து தொடரிலிருந்து முற்றிலும் விலகல்?

Updated: Sat, Jan 20 2024 12:56 IST
இங்கிலாந்து புறப்படும் முகமது ஷமி; இங்கிலாந்து தொடரிலிருந்து முற்றிலும் விலகல்? (Image Source: Google)

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா தலைமையில் 16 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இங்கிலாந்து தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை மட்டுமே வெளியிட்டுள்ள பிசிசிஐ இரண்டாவது டெஸ்ட் போட்டி நிறைவுபெறும் முன்னர் எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணியையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஏனெனில் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலககோப்பை தொடரின் போது கணுக்காலில் காயமடைந்த முகமது ஷமி அதன்பிறகு எந்த வித தொடரிலும் பங்கேற்காமல் சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து தொடரில் தான் அவர் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது முகமது ஷமியை பரிசோதித்த தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் ஆகியோர் முஹமது ஷமியின் காயம் இன்னும் குணமடையவில்லை என்பதை கண்டறிந்தனர்.

அதோடு இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக அவரை லண்டனுக்கு அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் அவர் இனியும் தாமதம் செய்தால் எதிர்வரும் ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை தொடரில் கூட பங்கேற்க முடியாமல் போக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே பிசிசிஐ அவரை அவசர அவசரமாக இங்கிலாந்தில் உள்ள சிறப்பு மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி முகமது ஷமி இந்திய அணியில் மீண்டும் விளையாட முடியாமல் போனது நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு என்றே கூறலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை