புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முகமது ஷமி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரிலிருந்து இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர், இந்தப் போட்டியில் ஒரு சிறப்பான சாதனையைப் படைக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்தப் போட்டிக்கான விளையாடும் பதினொன்றில் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட்டில் 450 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார். மூன்று வடிவங்களிலும் சேர்த்து இதுவரை 188 போட்டிகளில் 245 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள முகமது ஷமி 448 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங், கபில் தேவ், ரவீந்திர ஜடேஜா, ஜாகீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் மட்டுமே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளனர். இந்நிலையில் முகமது ஷமி தனது கடைசி சர்வதேச டி20 போட்டியை கடந்த 2022ஆம் ஆண்டில் விளையாடினார். இதுவரை இந்திய அணிக்காக 23 டி20 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கணுக்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த முகமது ஷமி கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்சமயம் காயத்தில் இருந்து குணமடைந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு முன் அவர் இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய். .