டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ஷமியின் இடம் உறுதி!
முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா டி20 தொடரிலிருந்து விலகினார் பும்ரா. அதேநேரம் டி20 உலகக் கோப்பை அணியிலும் இவரிடம் பெற்றிருப்பதால் அதிலும் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகங்கள் எழுந்து வந்தது. கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி வெளியான முழு மருத்துவ பரிசோதனை அறிக்கையில் பும்ராவிற்கு காயம் தீவிரமாக இருக்கிறது. அவரால் இன்னும் ஓரிரு மாதங்கள் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பும்ரா விலகுகிறார் என அதிர்ச்சிகரமான தகவலை பிசிசிஐ வெளியிட்டது. இந்நிலையில் ஏற்கனவே டெத் ஓவர்களில் மோசமாக செயல்பட்டு வரும் இந்திய அணிக்கு பும்ரா இல்லாதது இன்னும் கூடுதல் பின்னடைவாக அமைந்திருக்கிறது. இந்தியா உலகக்கோப்பை ரிசர்வ் வரிசையில் முகமது சமி மற்றும் தீபக் சகர் ஆகிய 2 வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டிருக்கிறது. இதில் ஒருவர் மாற்று வீரராக அறிவிக்கப்படலாம் என தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.
2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு முகமது சமி எந்தவித சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனாலும் டி20 உலக கோப்பை ரிசர்வ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். மேலும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக கரோனா வந்ததால் இவரால் இரண்டு தொடர்களிலும் பங்கேற்க முடியவில்லை.
ஆனால் தீபக் சகர், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்களில் பங்கேற்று நன்றாகவும் செயல்பட்டார். இதன் அடிப்படையில் பும்ராவிற்கு மாற்று வீரராக தீபக் சகர் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என யூகிக்கப்பட்டது. இதற்கிடையில் ராகுல் டிராவிட், ‘முகம்மது சமி எங்களுக்கு முதன்மை வீரராக இருப்பார். அவருக்கு கரோனா இருப்பதால், இரண்டாம்கட்ட பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகு, அதை பார்த்துவிட்டு நான் முடிவுகள் எடுப்பேன்.’ என தெரிவித்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று முகமது சமிக்கு உடல் தகுதி பரிசோதனை மற்றும் கரோனா தொற்று பரிசோதனை இரண்டும் நடத்தப்பட்டிருக்கிறது. இரண்டிலும் சமி தேர்ச்சி பெற்றுவிட்டார். ஆகையால் பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது சமி முடிவு செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆனாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவருவதற்கு முன்னதாக ஓரிரு தினங்களில் முகமது ஷமி ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறார். அதன் பிறகு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது தீபக் சஹார் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து வெளியேறியுள்ளதால் நிச்சயம் ஷமி தான் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.