6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முகமது சிராஜ்!

Updated: Sun, Sep 17 2023 18:42 IST
Image Source: Google

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது இன்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி முதலில் பந்துவீச களமிறங்கும் முன்னரே மழை பெய்ததால் போட்டி 40 நிமிடங்கள் வரை தாமதமானது. பின்னர் போட்டி தொடங்கியதும் முதல் ஓவரிலேயே மூன்றாவது பந்தில் குசால் பெரேராவை ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா வெளியேற்றி இருந்தார்.

இதன் காரணமாக இலங்கை அணி ஒரு ரன்னுக்கே ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் நான்காவது ஓவரை வீச வந்த முகமது சிராஜ் அந்த ஓவரில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரர்களில் யாரும் நிகழ்த்தாத ஒரு அரிதான சாதனையை நிகழ்த்தி அசத்தியதோடு மட்டுமின்றி இலங்கை அணியின் தோல்வியையும் அந்த ஒரு ஓவரிலேயே உறுதி செய்தார்.

ஏனெனில் அந்த ஓவரின் முதல் பந்தில் பதும் நிஷங்காவையும், மூன்றாவது பந்தில் சமர விக்ரமாவையும், நான்காவது பந்தில் அசலங்காவையும் கடைசி பந்தில் தனஞ்செயா டி சில்வாவையும் என நான்கு வீரர்களையும் அவர் ஆட்டம் இழக்க வைத்து வெளியேற்றினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளராக இன்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

அதோடு மட்டுமின்றி போட்டியின் ஆறாவது ஓவரையும் வீசிய முகமது சிராஜ் அந்த ஓவரின் நான்காவது பந்தில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை கிளீன் போல்ட் ஆக்கி 16 பந்திலிலேயே 5 விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சமிந்தா வாசின் சாதனையையும் சிராஜ் சமன்செய்துள்ளார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சின் காரணமாக இலங்கை அணியானது 15.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

 

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 6.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை